சாக்த வழிபாட்டில் கடுமையான உக்கிரத்துடன் இருக்கும் பராசக்திக்காக நடத்தப்படுவதே சண்டி ஹோமம். அப்படி உக்கிரத்துடன் இருக்கும் பராசக்தியே சிவன், விஷ்ணு, பிரம்மா என மும் மூர்த்திகளை படைத்தார் என்கிறது புராணம். தேவியின் மீது நம் அன்பை காட்ட, தேவியின் அருள் பெற்று நம் தேவைகளை நிறைவேற்றி கொள்ள என இரு விதமாக இந்த ஹோமம் செய்யப்படலாம். சாக்த வழிபாட்டில் அனைத்து ஹோமங்களூக்கும் தலையாய ஹோமம் இது என கூறலாம். கேட்டதை உடனே அருளும் சக்தி படைத்தது இந்த ஹோமம். மிக அதீத பொருட்செலவு மற்றும் மிக உக்ரமானது என்பதால் இந்த ஹோமம் அடிக்கடி நிகழ்த்தப்படுவதில்லை. ஒவ்வொரு அத்தியாய பாராயணத்தின் பொழுதும் தேவிக்கு அக்னியில் புடவை சாற்றப்படும். மொத்தம் பதினான்கு புடவைகள் சாற்றப்படும். உக்ரகம் அதிகம் என்பதால் வீட்டில் செய்யப்படுவதில்லை. கோவில்கள் அல்லது மடங்கள், மண்டபங்கள் போன்றவற்றில் மட்டுமே செய்விக்கப்படுகிறது. எவ்வளவு பரிகாரங்கள் செய்தும் பலன் இல்லாத நிலை,கிரகங்களினால் பிரச்சனைகள், பயம், மரண பயம், எதிரிகள் தொல்லை அழிய, எவ்வளவு பிரயத்தனம் செய்தும் முடிக்க முடியாத காரியங்கள் வெற்றி பெற, செல்வம் சேர இந்த ஹோமத்தை செய்தோ அல்லது கலந்து கொண்டோ தேவியின் அருளை பெறலாம்.பாராயண பலச்ருதியிலேயே இந்த பாராயணத்தை செய்பவருக்கு மட்டுமின்றி இதை உடனிருந்து கேட்பவருக்கும் அதீத பலன்கள் கிட்டும் என கூறப்பட்டுள்ளது. மஹாலக்ஷ்மி, சரஸ்வதி,மஹாகாளி என மூவருக்குமே செய்யப்படும் இந்த ஹோமத்தில் 700 ஸ்லோகங்கள் வரை கூறப்படும். வெளியில் கூற முடியாத காரியங்கள் வெற்றி பெற வேண்டுமானால் சண்டியை அணுகுவதை தவிர வேறு வழி இல்லை. அமாவாசை, அஷ்டமி, நவமி, சதுர்தசி போன்ற திதிகளில் செய்ய கை மேல் பலன் கிட்டும்.
ஹரி ஓம் தத் சத்