மேற்கண்ட மஹாளய பட்சத்தில் சில மிக முக்கிய ஸ்ரார்த்த தினங்கள் உள்ளன. இந்த தினங்களில் கண்டிப்பாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அவர்களின் பரிபூர்ண ஆசி கிடைப்பதோடு மட்டுமல்லாமல், நாம்  சேர்த்து வைத்துள்ள அனைத்து கர்ம வினைகளும் அடியோடு அழியும்.

11.9.17 மஹா பரணி எனப்படும்  பஞ்சமி ஸ்ரார்த்தம் : இந்நாளில் செய்யப்படும் ஸ்ரார்த்தம், கயாவில் சென்று செய்யப்படும் ஸ்ரார்தத்திற்கு இணையானது. திருமணம் ஆகாமல் மரணித்துள்ள ஆத்மாக்களுக்கு இந்நாளில் தர்ப்பணம், பிண்டம் கொடுக்க அவர்களின் ஆத்மா திருப்தி பெற்று நம்மை மனதார வாழ்த்தும்.

14.9.17 நவமி ஸ்ரார்த்தம் : இந்நாளில் சுமங்கலியாக இறந்துள்ள தாய், மனைவி போன்றோருக்கு தர்ப்பணம்-பிண்டம் கொடுத்து, சுமங்கலி பெண்களுக்கு சேலை,ரவிக்கை துணி, மஞ்சள்,குங்குமம்,வளையல் வைத்து தாம்பூலத்தேங்காயுடன் முடிந்த தட்சிணை சேர்த்து தானம் செய்ய, மேற்கண்டோரின் ஆத்மாக்களின் பரிபூர்ண ஆசியை பெறலாம்.

18.9.17 மக ஸ்ரார்த்தம் எனப்படும் திரயோதசி ஸ்ரார்த்தம் : மறைந்த இளம் குழந்தைகளுக்கு இந்நாளில் ஸ்ரார்த்தம் செய்ய, அனைத்து நலன்களும் சேரும். இவ்விஷயத்தில் ஒன்றை கவனிக்க வேண்டும்: இங்கே கூறி வரும் அனைத்து அதி முக்கிய நாட்களிலும், குறிப்பிட்டுள்ள நபர்களுக்கு தான் என்றில்லை. நம் முன்னோர்கள் எவராயினும் இத்தினங்களில் தர்ப்பணம் செய்து வரலாம். நாம் ஆசையாக வளர்த்த நாய், பூனை மற்றும் பசுக்களுக்கு கூட தர்ப்பணம் இந்நாட்களில் கொடுக்க அவர்களின் ஆத்மா நம்மை மனதார வாழ்த்தி, வாழ்வாங்கு வாழ வைக்கும்.

19.9.17 சதுர்தசி ஸ்ரார்த்தம் : இந்நாளில் அகால  மரணம் அடைந்த ஜீவன்களுக்கு, அதாவது விபத்து, கொலை, அல்லது தற்கொலை போன்று, மரணித்த ஜீவன்களுக்கு ஸ்ரார்த்த பிண்டம் கொடுக்க, மேலோகம் செல்ல முடியாது தவித்து கொண்டிருக்கும் அந்த ஆத்மாக்களை நிரந்தரமாக மேலுளுகம் செல்ல வைத்த புண்ய  பலன் உங்களின் பல தலைமுறைகளை காத்து காபந்து செய்யும். இந்த வருடம் இந்த திதியிலேயே மஹாளய அமாவாசை வருவதால், பகல் பன்னிரண்டு மணிக்கு முன் சதுர்த்தசி ஸ்ரார்த்தமும், பன்னிரெண்டேகால் மணிக்கு மேல் மஹாளய அமாவாசை ஸ்ரார்த்தமும் செய்து பின் மறுநாள் 20.9.17 அமாவாசை ஸ்ரார்த்த பிண்ட தர்ப்பணம் கொடுக்கவும்.

இதில் அனைத்து நாட்களிலும் அன்னதானம் செய்து, தர்ப்பணம் செய்வோர் மிகவும் பாக்கியவான்கள். இதன் புண்ய பலன் அளவிடமுடியாதது ஆகும். இதை உங்கள் அனுபவத்தில் காணலாம். இந்நாட்களில், மாமிசம்,மது, வெங்காயம்,பூண்டு,உருளை, போன்றவற்றையும் தவிர்ப்பது நலமளிக்கும்.

ஹரி ஓம் தத் சத்


Post a Comment

Previous Post Next Post

Get in touch!